
கன்னியாகுமரியில் கடனை அடைக்க ரூ.1 இலட்சம் தருவதாக கூறி 16 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்தவர் கைது. வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம்துறையைச் சேர்ந்த மீனவர் ராபர்ட் பெல்லார்மின் (41). இவர் தற்போது நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள புரோட்டா கடையில் வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய பெண் தேடினார். குமரி மாவட்டத்தில் பெண் கிடைக்காததால் தனது நண்பர் மூலம் வேறு ஊரில் பெண் தேடினார்.
அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் ரூ.1 இலட்சம் கடனை அடைத்தால், அந்தக் குடும்பத்தின் மூத்த மகளான 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் ஒரு பெண் நண்பர் மூலம் ராபர்ட் பெல்லார்மினுக்கு தகவல் வந்தது.
அதன்படி ரூ.1 இலட்சம் தருவதாகக் கூறி அந்தச் சிறுமியை திருச்செந்தூர் அருகே ஒரு கோவிலின் முன்பு வைத்துத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அந்தச் சிறுமியை பள்ளம்துறைக்கு அழைத்துவந்து தங்க வைத்திருந்தபோது முதல் மனைவியால் பிரச்சனை ஏற்பட்டதால் யாருக்கும் தெரியாமல் நாகர்கோவில் குருசடி பகுதியில் வாடகை வீடு எடுத்து திருமணம் செய்துகொண்ட அந்தச் சிறுமியுடன் குடித்தனம் நடத்தினார் ராபர்ட் பெல்லார்மின்.
அந்தச் சிறுமியை திருமணம் செய்த விவகாரம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியை வீட்டில் இருந்து வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறையும் வைத்துள்ளார்.
எப்படியோ இந்த தகவல் வெளியே கசிந்தது. இந்த விவகாரம் நாகர்கோவிலில் கோட்டார் சமூகசேவை சங்கத்தின்கீழ் செயல்படும் “சைல்டு லைன்” உதவி மையத்துக்கு தெரிந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமியை காவலாளர்கள் மீட்டனர்.
இதனையறிந்த ராபர்ட் பெல்லார்மின் தப்பியோடி தலைமறைவானார். மீட்கப்பட்ட சிறுமியை காவலாளர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் உள்ள சிறுமியின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவரும் நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தார். அவரிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், “தனது குடும்பக் கடன் ரூ.1 இலட்சத்தை செலுத்திவிடுவதாகக் கூறி மகளை அழைத்து வந்து திருமணம் செய்துவிட்டு, அந்த பணத்தைத் தராமல் ராபர்ட் பெல்லார்மின் ஏமாற்றி விட்டார்” என்பது தெரிந்தது.
இதுதொடர்பாக, போக்சோ - 2012 சட்டப் பிரிவுகளின்படி (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம்) அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கண்மணி மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து தலைமறைவான ராபர்ட் பெல்லார்மினை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராபர்ட் பெல்லார்மின் வெளியூர் தப்பிச் செல்வதற்காக நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நிற்பதாக காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கண்மணி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவரிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தியதில், “தான் திருமணம் செய்து கொண்ட சிறுமிக்கு 20 வயது என்று கூறித்தான் அவளது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தார்கள்” என்று தெரிவித்தார்.
பின்னர் போலீசார், ராபர்ட் பெல்லார்மினை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தனர்.
இதனிகிடையே ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு நேற்று மருத்துவ பரிசோதனை முடிந்தது. பின்னர் சிறுமி மாவட்ட குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிறுமியிடமும், அவருடைய தாயாரிடமும் குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் விசாரித்தபோது சிறுமி தனது தாயாருடன் செல்ல விரும்புவதாகவும், தாயாரும் தன் மகளை தஞ்சைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.
இருப்பினும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகுதான் சிறுமியின் விருப்பப்படி தாயாருடன் அனுப்பிவைக்க முடியும் என்பதால் தற்போது நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமியை தங்க வைத்துள்ளனர். அங்கு பத்து நாள்கள் வரை சிறுமி தங்கியிருப்பார். அதன் பிறகு சிறுமி விருப்பப்படி அவருடைய தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டாலும் தஞ்சை மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள், உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களால் கண்காணிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.