2022ல் தமிழகத்தை அதிரவைத்த தற்கொலைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்கொலை செய்வது எதற்கு தீர்வல்ல என்று அறுவுறுத்தப்பட்ட போதிலும் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பல்வேறு காரணங்களால் மன உடைந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதையே தீர்வாக கருதி அதிரடி முடிவு எடுத்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். அதில் பல தற்கொலைகள் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. அவ்வாறு 2022ல் தமிழகத்தை அதிரவைத்த தற்கொலைகள் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
குடும்பத்தை கொன்று தானும் தற்கொலை:
கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மணிகண்டனுக்கு கடந்த சில வருடங்களாக மணிகண்டனுக்கு தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மணிகண்டன் சுமார் 15 லட்ச ரூபாய் அளவிற்கு கடன் பெற்றதுடன், அதைத் திருப்பி அடைக்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மணிகண்டன் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக பணிக்கு செல்லாமல் கடன் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜன.1 ஆம் தேதி வழக்கம் போல ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனது இரு மகன்களையும் தலையணையால் அழுத்தி கொலை செய்த மணிகண்டன், தானும் சமையலறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடன்பிரச்சனையால் குடும்பத்தை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாணவி தற்கொலை:
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் தஞ்சாவூரில் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும் பள்ளிக்கு அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் மாணவி தங்கியிருந்து படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜன.9 ஆம் தேதி மாணவி உடல்நலக்குறைவு காரணமாக வாந்தி எடுத்ததாகவும் வயிற்றுவலி என்று கூறியதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டு, மறுநாள் மாணவியின் தந்தை வந்து மகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் மாணவிக்கு உடல் நிலை சரியாகாமல் மேலும் மோசமடைந்ததால் கடந்த 15 ஆம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடந்த 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். முன்னதாக மாணவியை பரிசோதித்த மருத்துவர்களிடம் மாணவி, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் மாணவியிடம் விசாரித்தனர்.
இதையும் படிங்க: YearEnder 2022: 2022ல் மரணம் அடைந்த அரசியல் பிரபலங்கள் ஒரு பார்வை!!
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு விடுதி வார்டனின் தொல்லையே காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர், மாணவியை மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதாலே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம்செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தற்கொலை:
திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் போட்டியிட்டார். கடந்த பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, மக்கள் நீதி மையம் வேட்பாளர் மணி வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திவாகரன் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றர். தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்த மணி, வெறும் 44 ஓட்டுகள் மட்டுமே கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணி, பிப்.24 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். குறைந்த வாக்குகள் வாங்கிய விரக்தியில் வேட்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்பிரிவு ஏட்டு தற்கொலை:
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமாருக்கும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.க்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகுமார், முகப்பேரில் வசிக்கும் பெண் எஸ்.ஐ வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு பெண் எஸ்.ஐயோடு கிருஷ்ணகுமார் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற நொளம்பூர் போலீசார், கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த கிருஷ்ணகுமார் மார்ச் 5 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமரி, தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Year Ender 2022: 2022ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் திருப்பு முனைத் தீர்ப்புகள்
கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. இவர் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றேர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டம் வன்முறையாக வெடித்தது. கடந்த ஜூலை 17 ஆம் தேதி அந்தபள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்து உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி தீக்கரையாக்கினர். இதனையடுத்து, காவல்துறை தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மாணகி சரளா, கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து கிளப்பியதாகவும் அறையில் இருந்த சக நண்பர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே காலை உணவு அருந்த உடனிருந்த மாணவிகள் சென்ற நிலையில், அறையில் தனியாக இருந்த மாணவி சரளா கடந்த ஜூலை 25 ஆம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுக்குறித்தான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு, போலீசார் விடுதி காப்பாளர் மற்றும் சக நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.