பாராக மாறிய அரசுப் பள்ளி…? - தொடரும் குடிமகன்களின் அட்டகாசங்கள்…

By manimegalai aFirst Published Nov 24, 2021, 9:58 AM IST
Highlights

அரசு பள்ளி ஒன்று குடிமகன்களின் பாராக மாறியிருப்பது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறையில் மதுபாட்டில்கள், டம்ளர்கள் கிடந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அரசுப் பள்ளியில், அம்மாபேட்டை ஒன்றியம், குறிச்சி ஊராட்சி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். 

பள்ளியில் ஆங்காங்கே சுற்றுசுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால்,  இப்பள்ளியின் விடுமுறை நாள்களில் சேதமடைந்த சுற்றுச்சுவர் வழியே பள்ளிக்குள் செல்வோர் வகுப்பறைக்கள் மது அருந்தி வருகின்றனர்.மது அருந்துவது மட்டுமல்லாமல், புகை மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள்களையும் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் சென்றபோது 10-ம் வகுப்பு வகுப்பறையின் மேஜையில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வந்தவர்கள் வகுப்பறையின் பூட்டை உடைத்துச் சென்று மது அருந்தியதும், இரண்டு சேர்களை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

விடுமுறை நாள்களில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பள்ளிக்கு இரவு காவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த சுற்றுசுவர்களை மீண்டும் மறுசீரமைக்க வேண்டும். மேலும், பள்ளிக்குள் அத்துமீறி செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாணவர்கள் படிக்கும் பள்ளி அறை, குடிமகன்களின் பாராக மாறியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


 

click me!