”சாலையில் நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…”

By manimegalai a  |  First Published Nov 24, 2021, 9:46 AM IST

சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் நாற்று நட்டும், உருளு தண்டம் போட்டும்  போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.


 

நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அமைந்து இருக்கிறது குப்பிச்சிபாளையம் ஊராட்சி. இங்குள்ள செக்காரப்பட்டி அருந்ததியர் காலனி பகுதியில்  கான்கிரீட் ரோட்டில் மழைநீர் தேங்கி இருப்பதால் 23 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு,மூன்று வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பல இடங்களில் மக்கள் மழையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Latest Videos

undefined

கடந்த வாரம் பெய்த மழை இன்று வரை ரோட்டில் தேங்கி உள்ளதாகவும், யாரும் இதனை கண்டுகொள்வதில்லை என்றும் புகார்களை அடுக்குகின்றனர் செக்காரப்பட்டி அருந்ததியர் காலனியில் வசிப்பவர்கள்.மழை நீர் தேங்குவதால், அடிக்கடி வழுக்கி விழுந்து அடிபடுவதாகவும், அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் போதிய பஞ்சாயத் நிதி இருந்தும் எந்த வசதியையும் செய்து தரவில்லை. 

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை பற்றி கூறியும், கண்டு கொள்வதில்லை. எனவே சாலையை உடனே  சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன், பொதுமக்களுடன் இணைந்து சாலையில் நாற்று நட்டும், உருளுதண்டம் போட்டும் போராட்டம் செய்தனர். பஞ்சாயத்து தலைவர் இங்கு வரும் வரை, தெருவில் இருந்த தேங்கி நின்ற சாக்கடை நீரில் உருளுதண்ட போராட்டம் செய்தனர் பொதுமக்கள். 

மேலும் அதிகாரிகள் வராமல் எந்திரிக்க மாட்டோம் எனவும் நூதன போராட்டம் செய்தனர்.போராட்டம்  நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ‘கான்கிரீட் சாலை போட்டுத்தர திட்டத்தில் இடமில்லை. ஆனால் பேவர்டு பிளாக் கல் பதிக்கப்பட்டு சாலை போட அனுமதி கிடைத்து  இரண்டு மாதங்களாகியும், மக்கள் காங்கிரிட் சாலைதான் வேண்டும் என்று கூறுவதால் இதுவரை சாலை போட முடியவில்லை’ என்று  தெரிவித்தார். 

மேலும், போராட்டக்காரர்களுடன் பேசி நாளையே வடிகால் வசதி அமைத்து ஃபேவட் பிளாக் போட்டு நல்ல முறையில் சாலையில் நீர் தேங்காத வகையில் சாலையை உயரம் செய்து தரமான சாலை அமைப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். காலை 8 30 மணி துவங்கிய போராட்டம் 9 40 மணியளவில் நிறைவடைந்தது.

 

click me!