திமுகவுக்கு எதிராக திரளும் பழங்குடி மக்கள்.. காஞ்சிபுரத்தில் என்ன தான் நடக்குது…

Raghupati R   | Asianet News
Published : Nov 27, 2021, 01:36 PM IST
திமுகவுக்கு எதிராக திரளும் பழங்குடி மக்கள்.. காஞ்சிபுரத்தில் என்ன தான் நடக்குது…

சுருக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள பழங்குடி மக்களை மிரட்டுவதாக  திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக 12-க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள்  ஆங்காங்கே தங்கி மரம் வெட்டுதல், மீன்பிடித்தல் ,விவசாய கூலி வேலைகள் செய்தல், செங்கல் சூளைக்கு செல்லுதல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது விட்டுவிட்டுப் பெய்துவரும் கனமழையின் காரணமாக,  சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பாப்பாங்குழி என்ற கிராமத்தில் குப்பைகளை சேகரித்து பிரித்தெடுக்கும் பகுதியில்,  டென்ட் கொட்டாயை அமைத்து நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

இருளர் சமுதாய மக்களான அவர்கள், அங்கேயே தங்கி  சமைத்து, சாப்பிட்டு கூலிவேலைகளை செய்து வருகின்றனர். அதில் பாலகிருஷ்ணன் என்பவர் மனைவி கவிதா, மற்றும் 3 மாத கை குழந்தையுடன் தங்கியுள்ளார். அதேபோல் முருகன் என்பவர் தன்னுடைய 6 மாத கர்ப்பிணி மனைவியான பவானியுடன் தங்கி கூலி வேலைகளை செய்து வருகிறார். 

இதேபோல் பூபதி தன்னுடைய மனைவி வேதவல்லியுடனும் சந்தோஷ், சீனிவாசன் ,பரத், ஆகியோர்களும் அங்கு தங்கி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.மழைக்காலம் என்பதால் இந்த டென்ட் கொட்டாய்க்கு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், இருளர் மக்கள் அனைவரும் படுத்திருந்தனர். அப்போது, பாப்பாங்குழி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் லோகநாதன் என்பவர், இருளர் மக்களைப் பார்த்து உடனடியாக இந்த ஊரை விட்டு வெளியேறுங்கள் என கூறியுள்ளார். 

உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேறாவிட்டால்,  உங்கள் அனைவரையும் டென்ட் கொட்டாயில் வைத்து ஊற்றி கொளுத்தி விடுவேன் என மிரட்டியதால், அச்சமுற்ற இருளர் மக்கள் அனைவரும் பயந்து நடுங்கி இரவு முழுவதும் தூங்காமல் சாப்பிடாமல் அச்சத்துடன் இருந்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து இருளர் இன மக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இருளர் சமுதாய மக்களுக்கு மாநில அரசு அனைத்து விதமான உதவியும் செய்ய வேண்டுமென, முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த பிரமுகர் சமுதாய மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது அப்பகுதி சமூக ஆர்வலர்களிடையே மிகவும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!