அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளராக இருந்த சண்முகம் எங்களை தாழ்த்தப்பட்ட மக்களை (Schedule Caste) போன்று நடத்தியதாக திமுக எம்பி தயாநிதி மாறன் பேட்டியளித்தது பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தயாநிதி மாறன் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்பிக்கள் புகார்- தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு
கடந்த 2020ஆம் ஆண்டு திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளராக இருந்த சண்முகத்தை சந்தித்து திமுக எம்பிக்கள் மனு வழங்கினர். இந்த மனுக்களை கொடுத்து விட்டு தலைமை செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் . நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறி ஆதங்கத்தை தயாநிதி மாறன் வெளிப்படுத்தினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தயாநிதிமாறனுக்கு எதிராக புகாரும் கூறப்பட்டது. அப்போது கோயம்புத்தூர் சி.எம்.சி காலனி வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் காவல் நிலையத்தில் தயாநிதி மாறன் மீது புகார் அளித்தார். அதில் தாழ்த்தப்பட்ட மக்களை எம்பி தயாநிதி மாறன் இழிவுபடுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தியிருந்தார்.
சென்னைக்கு மாற்றப்பட்ட வழக்கு
அதன் பேரில் எம்பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோயமுத்தூர் B3 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணையின் சம்பவ இடம் சென்னை என்பதால் இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று திமுகவின் தற்போதைய எம்பியான தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோர்ருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.