தொழிலாளர்களின் பணி நேரம் எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான சட்ட மசோதா அதிமுக, திமுக தவிர பிற எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
தொழிற்சாலைகள் சட்டம்
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 12 ம் தேதி 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் ) சட்ட முடிவு தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டப்பேரவையின் கூட்டத்தின் கடைசி நாளையொட்டி பல்வேறு மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் ) சட்ட முடிவு மசோதாவை நிறைவேற்றுவதற்கு இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் போது சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், மமக, விசிக, பாஜக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்தனர். இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, 12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், எட்டு மணி நேரம் வேலை என்பதை நீர்த்துப்போக செய்யும் சட்ட மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
12 மணி நேரமாக பணி நேரம்
இதே போல, இந்த சட்டம் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிந்தனைச் செல்வன் வலியுறுத்தினார். மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிஐ தளி ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.. காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப் பெருந்தகை, இந்த சட்ட மசோதா தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் தொழிலாளர்கள் பயனடைய மாட்டார்கள் என்று தெரிவித்தார். பாஜக சார்பாக பேசிய நயினார் நாகேந்திரன், இந்த மசோதாவை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்
இதற்கு பதில் விளக்கம் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், இந்த சட்டத்தால் எல்லோருக்கும் பாதிப்பு இல்லை என்றும், தற்பொழுது உள்ள நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும் என்றார். 48 மணி நேரத்தை நான்கு நாட்களில் முடித்த பிறகு மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தமானது அனைவருக்கும் கொண்டுவரப்படவில்லை என்றும், யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிபிஎம். சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்