தனியார் பள்ளியில் 10 அடி பள்ளத்தில் விழுந்த மாணவன் பலி - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

 
Published : Jul 13, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
தனியார் பள்ளியில் 10 அடி பள்ளத்தில் விழுந்த மாணவன் பலி - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

சுருக்கம்

A 10-year-old student died in school

பெரும்புதூர் அருகே படப்பை அடுத்த காவனூர் காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (35). டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (29). தம்பதிக்கு சபரீஷ் (6), யுவனேஷ் (2) ஆகிய மகன்கள் உள்ளனர்.

சபரீஷ், வடமேல்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். இந்த பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடுவதற்கான மைதானம் அமைந்துள்ளது.

இங்கு பள்ளியின் வகுப்பறைகளில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக சுமார் 10 அடியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில், தினமும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பள்ளி மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பள்ளத்தில், தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் மாணவர்களுக்கான உடற்பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது, சபரீஷ் உள்பட 2ம் வகுப்பு மாணவர்கள் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென சபரீஷ் உள்பட 2 பேர், தண்ணீர் நிரம்பி இருந்த பள்ளத்தில் விழுந்தனர். இதை பார்த்ததும், சக மாணவர்கள், பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக ஓடிவந்த அவர்கள் பள்ளத்தின் மேல் பகுதியில் இருந்த மாணவனை பத்திரமாக மீட்டனர். அதற்குள் சபரீஷ், தண்ணீரில் மூழ்கினான்.

 இதையடுத்து தண்ணீரில் மூழ்கிய சபரீஷை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதனை செய்த டாக்டர்கள், சபரீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும், அவர்கள் பதறியடித்து கொண்டு, உறவினர்களுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மாணவனின் சடலம் மட்டும் இருந்தது. பள்ளி நிர்வாகத்தினர் ஒருவரும் இல்லை. 

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டனர். அங்கிருந்த நுழைவாயில் கேட்டு, கண்ணாடிகள், கதவுகளை அடித்து உடைத்தனர்.

மேலும், மாணவனின் சாவுக்கு பள்ளி  முதல்வர், மற்றும் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும்  என வலியுறுத்தி பள்ளியின் முன் அமர்ந்து நள்ளிரவு வரை போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், மாணவர்கள் விளையாடும் மைதானத்தில்  குப்பை கொட்டுவதற்்காக ஏன் பள்ளம் தோண்டப்பட்டது என கேட்டதற்கு, பள்ளி  நிர்வாகத்தினர் பதில் கூற மறுக்கின்றனர். இதுபோன்ற பள்ளம் இருப்பதே பள்ளி  நிர்வாகத்துக்கு தெரியாது என பொய் கூறுகிறார்கள்.

அதேபோல் உடற்பயிற்சி  வகுப்பின்போது, மாணவர்களுடன் உடற்பயிற்சி ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால்,  சம்பவ நேரத்தில் அவர் அங்கு இல்லை. சிறிய பிள்ளைகள், விளையாடும்போது எந்த  ஒரு பாதுகாப்பு விழிப்புணர்வும் இல்லாமல் அசட்டுதனமாக இருந்துள்ளனர். 

மாணவனை அடித்து கொலை செய்து, பள்ளத்தில் வீசிவிட்டு, அவன் தவறி விழுந்ததாக  நாடகம் ஆடுகிறார்கள். மாணவன் சபரீஷ் சாவுக்கு, பள்ளி நிர்வாகமே காரணம்.  இதனால், பள்ளிக்கு சீல் வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!