ரத்தானது நாளை நடைபெற இருந்த 8வது மெகா தடுப்பூசி முகாம்... அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 11:01 AM IST
Highlights

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 8வது கொரோனா  தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து நாளை நடைபெற இருந்த தடுப்பூசி மூகாம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா  தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய 9 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 100 கோடி டோஸ்  தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 வாரமாக 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், 19 ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26 ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் 3 ஆம் தேதி  17.04 லட்சம் பேருக்கும், கடந்த 10 ஆம் தேதி  22.85 லட்சம் பேருக்கும், கடந்த 23 ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரு கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 8வது கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், சுமார் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி,  நாளை எட்டாவது தடுப்பூசி முகாம் மூலம் நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் 2வது தவணை கோவாக்சின் தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், கோவிஷீல்டு  தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து தொடர்ந்து 8வது வரமாக தடுப்பு முகாம்கள் நடைபெற்றாலும் இன்னும் தடுப்பூசி போடவேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக 16 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும் இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் முகாம்கள் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி தற்போது தீபாவளி பண்டிகையாக இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாகவும் இந்த சமயத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தினால் அவர்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு வேலைக்கு வரும் சூழல் உருவாகும் என்றும் இது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்த அதிகாரி, இதை எல்லாம் கருத்தில் கொண்டு மெகா தடுப்பூசி முகாமை நாளை நடத்துவதற்கு பதில் அடுத்தவாரம் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!