
ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 84-வது நாளாக போராடும் நெடுவாசல் மக்களை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தென்னை மட்டைகளை தீ வைத்து எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஐட்ரோகார்பன் எடுப்பதால் வளமான பகுதிகள் அழிந்து பாலைவனமாக மாறும் என்பதை அறிந்திருந்தும் மக்களின் எதிர்ப்புகளை மீறி இப்படி ஒரு திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய மோடி அரசு.
மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்று வாய் வார்த்தையாக சொல்லிக்கொண்டு திரியும் பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்றோர் ஐட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் தேவையில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றபோதும் அதற்கு ஒப்புதல் வழங்கி மக்கள் நலனுக்கு எதிரான விரோதப் போக்கை கடைப்பிடித்துள்ளனர்.
ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 84-வது நாளாக நேற்று போராட்டம் நடைப்பெற்றது.
இதில் பங்கேற்ற மக்கள் ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, தென்னை மட்டைகளை தீ வைத்து எரித்து ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேலும், ஐட்ரோகார்பன் போராட்டக்குழு சார்பில் உயர்மட்டக்குழு அமைத்து போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக பல முயற்சிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். அதனால், போராட்டம் மேலும் தீவிரமடைய தொடங்கி உள்ளது. நேற்றைய போராட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.