ஒரே மாதத்தில் அரசியல் பிரமுகர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் 8 பேர் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் நிர்வாகிகள் கொலை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் சேலத்தை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாமக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இப்படி அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே மாதத்தில் அரசியல் பிரமுகர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
8 கொலைகள் விவரம்:
1. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் (54) என்பவர் கடந்த 3ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
2. மயிலாடுதுறை மாவட்டம், நடராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ராஜேஷ் (26) இரவில் மர்ம நபர்களால் கொலை
3. சென்னை பெரம்பூரில் 5ம் தேதி புதிதாக கட்டப்படும் வீட்டருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் மற்றும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் (52) 8 பேர் கொண்ட கும்பலால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.
4. கடந்த 8ம் தேதி இட பிரச்னை காரணமாக திருச்சி மாவட்டம் ஜெம்புநாதபுரத்தில் திமுக கிளைச் செயலர் ரமேஷ் (55) என்பவர் வெட்டிக் கொலை.
5. கடந்த 16ம் தேதி மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்ரமணியன் (50) அதிகாலையில் நடை பயிற்சியின் போது அமைச்சர் பழனிவேல் தியாராஜன் வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.
6. கடந்த 28ம் தேதி கடலூர் மாவட்டம் நவநீதம் நகர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன்(43) மீது காரை மோதி கீழே சாய்த்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை.
7. சிவகங்கை மாவட்டம் வேலாங்குளத்தில் பாஜக கூட்டுறவு மாவட்ட செயலாளர் செல்வகுமார் (52) கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
8. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜாக்சன் (35) 6 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார்.
200 நாட்களில் 595 கொலைகள் அரங்கேறி உள்ளன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதை நிரூபிக்கும் வகையில் நாளுக்கு நாள் கொலை கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.