
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கிராமத்திற்கு பக்கத்திலேயே காட்டுப்பகுதியில் 70 யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காட்டுப்பகுதி வட்டவடிவுப் பாறை பகுதியில் கடந்த மூன்று நாள்களாக 70 யானைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் படையெடுத்துச் சென்று ராகி, அவரை, துவரை, சோளம், தக்காளி உள்ளிட்ட பயிர்களை தின்று வருகின்றன.
இந்த யானைகள் வியாழக்கிழமை காடு இலக்கசந்திரம், மேகலகௌண்டனூர், திம்மசந்திரம், கலகோபசந்திரம், சார்கலட்டி, மாரசந்திரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தின. இதில் கலகோபசந்திரத்தில் ஐந்து ஏக்கர் ராகியும், துவரையும், தக்காளித் தோட்டமும் சேதமடைந்தன.
தற்போது வட்டவடிவுப் பாறை பகுதியில் முகாமிட்டுள்ள 70 யானைகளையும் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில், 25 பேர் கொண்ட வனக் குழுவினர் யானைகளை கர்நாடக வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிகளுக்கு இரவு நேரத்தில் யானைகள் வருவதால், கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும், பகலில் வனப் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்ல வேண்டாம் என்றும் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.