
கரூர்
பள்ளி மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டிய பள்ளித் தலைமை ஆசிரியையைக் கண்டித்து மாணவ, மாணவிகளின் பெற்றோரகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகேயுள்ள சல்லிப்பட்டியில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, 96 மாணவ, மாணவிகள் பயில்கிறார்கள்.
இந்தப் பள்ளியின் தலைமையாசிரியையாக சாரதா என்பவர் உள்ளார். இவர், மாணவ, மாணவிகள் ஏதாவது தவறு செய்தால் அவர்களைத் தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டுவாராம்.
இதனை மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறும்போது ஆசிரியர்கள் உங்களது நன்மைக்காகத்தான் திட்டுவர் எனப் பெற்றோர் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று அந்தத் தலைமையாசிரியை பள்ளி மாணவி ஒருவரை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் இதைத் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
அதனை அறிந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை இந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர். பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு உள்ளனர் என்ற தகவலறிந்த தலைமை ஆசிரியை பள்ளிக்கு வரவில்லை.
இந்த நிலையில் தாந்தோணி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ரமணி அந்தப் பள்ளிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, "இனி இதுபோன்ற செயல்கள் நடக்காது, தலைமை ஆசிரியைக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.