
அரியலூர்
அரியலூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.1500 இலஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுப் பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ப. சீனிவாசன் (65). ஓய்வுப் பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் 2008 -ஆம் ஆண்டு டிச. 7-ஆம் தேதியன்று மணப்பத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விஸ்வநாதன் என்பவரிடம், பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாக கூறி ரூ.1500 இலஞ்சம் பெற்றார்.
இதனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவலாளரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று வழக்கு விசாரணையின் நிறைவில், சீனிவாசனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.
பின்னர், சீனிவாசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.