
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற 7 மீனவர்கள் இரண்டு நாள்களுக்கு முன்னரே கரை திரும்ப வேண்டியர்கள் இன்னும் திரும்பாததால் அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகள், வலைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி நாகப்படினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த நவநீதன் (28), கிருஷ்ணன் (28), சுந்தரகுமார் (27), ரத்தின குமார் (27), அஞ்சப்பன் (50), குருநாதன் (27) ஆகிய 7 பேர் நாகை கடுவையாற்றில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் கடந்த வியாழக்கிழமையே கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால், அவர்களது உறவினர்கள், அப்பகுதி மக்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் நாகையில் கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததாலும், கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசுவதாலும் 7 மீனவர்கள் சென்ற படகு திசை மாறி சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கடலோர பாதுகாப்பு குழும காவலாளர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்ததன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும காவலாளர்கள் மாயமான ஏழு மீனவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.