
கடந்த சில காலமாக சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் தற்போது கொரோனா பரவல் தொடர்பான தகவல்கள் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பொது இடங்களில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் என்பி 1.8.1 மற்றும் எல்எப் 7 என இரு புதிய கொரோனா வகைகள் பரவி வருகின்றன. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
இந்நிலையில், சென்னை மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கடந்த 1 வாரத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.