வடசென்னையில் பரவும் டெங்கு காய்ச்சல் - 6 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி ; பொதுமக்கள் கடும்பீதி

First Published Oct 21, 2016, 2:25 AM IST
Highlights


திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே வடசென்னையில் 6க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர். தற்போது, சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால், வடசென்னை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சிறுவர்கள் உள்பட 13 பேர் இறந்துள்ளனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோர் இறந்ததாக செய்திகள் வந்த வண்ண்ம் உள்ளன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள், தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை யாரும் அதனை கடைபிடித்ததாக தெரியவில்லை. அனைத்து பகுதிகளிலும் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எழும்பூர்  குழந்தைகள் மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு அக்கா, தம்பி உள்பட 4  பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். எண்ணூர் சாஸ்திரி நகரை சேர்ந்த தர்ஷினி (7), சுனாமி குடியிருப்பை சேர்ந்த சந்தியா (14) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் இறந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி (17) என்ற பெண் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், வடசென்னையை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் மோகன். டிவி மெக்கானிக். இவரது 6 வயது மகள், திருவொற்றியூர் ராஜாக்கடை தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த 4 நாடகளாக சிறுமிக்கு காய்ச்சல் இருந்து வருகிறது. இதனால் மோகன், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், டாக்டர்கள் அதனை மறுத்து மர்ம காய்ச்சல் என கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘திருவொற்றியூர் மண்டலத்தில் அடங்கிய அண்ணாநகர், அண்ணாமலை நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், எண்ணூர் சுனாமி குடியிருப்பு, சத்தியமூர்த்தி நகர் உள்பட பல பகுதிகளில் திறந்தவெளி கால்வாய்கள் உள்ளன. இதில் கொசுக்கள் உற்பத்தயாகி, பொதுமக்கள் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த பகுதி ஒதுக்கப்பட்ட பகுதியை போல் உள்ளது. இங்கு அதிகாரிகள் யாரும் சுகாதார பணிகளை மேற்கொள்வது கிடையாது. குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதை அகற்றுவதற்கோ, பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்வதற்கோ மாநராட்சி ஊழியர்கள் வருவதில்லை. இதுபற்றி பலமுறை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளன.

திருவொற்றியூர் அண்ணா நகர், கிளாஸ் பேக்டரி சாலையில் தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு பொதுவான தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர். ஆனால், அதை முறையாக பராமரிப்பது இல்லை. திறந்தநிலையில், கொசுவலையை போட்டு மூடி வைத்துள்ளனர். அந்த தண்ணீரில் புழுக்களும், பூச்சிகளும் உள்ளன. இந்த தண்ணீரை பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனால், இதுபற்றி கட்டிடத்தின் உரிமையாளர்களோ, சுகாதார துறை அதிகாரிகளோ கவனிப்பது இல்லை. தற்போது, சிறுமிக்கு ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலை அறிந்ததும் இப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். எனவே, சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் தொடரும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்,’ என்றனர்.

click me!