
தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்யவும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் பா.ம.க.வின்.செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாமக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பொது வார்டுகள், பெண்களுக்கான பொது வார்டுகள், ஆதிதிராவிடர், மலைவாழ் மக்களுக்கான பொது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கான வார்டுகள் குறித்து குளறுபடியான இடஒதுக்கீடு பட்டியல் அறிவிக்கப்பட்டது.
எனவே அடுத்து தேர்தல் அறிவிக்கும் முன்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடஒதுக்கீடு வார்டுகளை சீராக வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு பட்டியலை வரைமுறைப்படுத்தி முறையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்..
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பாமக ஏற்கனவே அறிவித்தபடி தனித்து போட்டியிடும் என்றும், வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்யவும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.