
கரூரில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்ற முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி ரூபாய் 5.7லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கரூரை அடுத்த பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் முருகானந்தம்.
இவர்கள் 3 பேரும் மாருதி ஆம்னி வேனில் இவர்களது உறவினர் ஒருவரிடமிருந்து ஒரு வீட்டை போக்கியத்திற்கு பரிமாற்றம் செய்வதற்காக பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது பத்திர பதிவு எழுத்தரை சந்தித்து ஆவணங்களை சரிபார்ப்பதற்காக முத்துசாமியும், முருகானந்தமும் சென்றிருந்தநிலையில், சரஸ்வதி மட்டும் காரில் இருந்துள்ளார்.
அங்கு மற்றொரு காரில் வந்த 25-வயது மதிக்கதக்க நபர் ஒருவர் சரஸ்வதியிடம் உங்களது பணம் காருக்கு கீழே சிதறி கிடக்கிறது என கூறியதாக தெரிகிறது.
இதனை கேட்டு சரஸ்வதி காரைவிட்டு கீழே இறங்கியபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ரூபாய் 5-லட்சத்து 70-ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு காரில் வந்த நபர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.