மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்து பிட்.. 5 கிலோ பிட் பேப்பர் பறிமுதல் விவகாரம்..கூண்டோடு தூக்கப்பட்ட அதிகாரிகள்

By Thanalakshmi VFirst Published May 20, 2022, 12:26 PM IST
Highlights

நாமக்கல் மாவட்டம் கொல்லைமலை தேர்வு மையத்தில் பிட் பேப்பர் கண்டறியப்பட்ட விவகாரத்தில் 11 தேர்வறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பின் பேப்பர் 5 கிலோ அளவில் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம்வர்மா நடவடிக்கை எடுத்துள்ளார்.
 

தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கு  மே 5-ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வு இந்த மாதம் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு மே 6 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மே 9 தேதியும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முன்னதாம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு நடத்தப்பட்ட இரண்டும் திருப்புதல் தேர்வுகளிலும் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுத்தேர்வில் இதுப்போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில்,  வினாத்தாள் வைக்கும் கட்டுப்பாடு அறைக்கும் துப்பாக்கி ஏந்திய காவாளி பாதுகாப்பு, இரட்டை பூட்டு, சிசிடிவி போன்ற நடவடிக்கை தேர்வுத்துறை மேற்கொண்டது. 

இதனிடையே பொதுத்தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்கள் செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுதுவதில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் காப்பி அடித்தால் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைப்போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்வில் மாணவர்கள் பிட் எடுத்து வந்து எழுவதற்கு பள்ளிகள் உறுதுணையாக இருந்தால், அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் போன்ற கடுமையான உத்தரவு போடப்பட்டது.

இந்நிலையில் தான் நாமக்கல்லில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பிற்கான கணிதத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. அன்று, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு தொடங்குவதற்கு முன் தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் மாணவர்களிடம் சோதனையிட்டனர்.

இந்த அதிரடி சோதனையில் தேர்வில் காப்பி அடிப்பதற்காக சில மாணவர்கள் பாடப்புத்தங்களை சிறிய அளவில் சுருக்கி மைக்ரோ பிட் பேப்பர்களாக தயார் செய்து, மறைத்து வைத்து எடுத்துவந்தது கண்டறிப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ அளவிற்கு மைக்ரோ ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த விவகாரம் தேர்வுத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 தேர்வு அறை கண்காணிப்பாளர்களை கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க: ரூ.120க்கு விற்கப்படும் தக்காளி ரூ.70க்கு விற்பனை..!ரேசன்கடைகளிலும் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு

click me!