தொடர் மழையின் காரணமாக தக்காளியின் விலை ரூ.100ஐ தொட்டுவுள்ள நிலையில், குறைந்த விலையில் தக்காளியை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மழையால் தக்காளி விலை அதிகரிப்பு
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளின் விலை தொடர்ந்து அதிகரித்து, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒட்டன்சத்திரம் சுற்று சுற்றுப்புற பகுதிகளில் அதிகப்படியான தக்காளி விவசாயம் நடைபெற்றது. அதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்தன. தற்போது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் தக்காளி உற்பத்தி சீசன் இப்பகுதியில் இல்லாத காரணத்தாலும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் திற்கு உட்பட்ட பகுதிகளான மாங்கரை. கொட்டாரப்பட்டி. புதுப்பட்டி. ஆகிய கிராமங்களிலிருந்து மட்டும் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு தினந்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக தக்காளியின் விலை சில்லறை விற்பனையில் ரூ.100ஐ தாண்டியுள்ளது. வரும் நாட்களிலும் சற்று விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
undefined
பண்ணை பசுமை மையங்களில் விற்பனை
இந்தநிலையில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இநலையில் விலையை குறைத்து பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டுறவுத்துறை நடத்திவரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 2711.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1100 மெட்ரிக்டன் அளவிற்கும் ரூ.4 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45/- முதல் ரூ.55/- வரை விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தக்காளி ரூ.70க்கு விற்க நடவடிக்கை
தற்பொழுது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.90/-முதல் ரூ.120/-வரை வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுவர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக இன்று (19.05.2022) 4 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு. ஒரு கிலோ ரூ.70/-முதல் ரூ.85/-வரை விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தக்காளியின் கட்டுப்படுத்தப்படும் வரை வெளிச்சந்தை விலை இந்நடவடிக்கை நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுவர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மக்கள் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தரமான தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவான விலையில் வாங்கி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.