#Breaking : பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

By Narendran SFirst Published Jan 11, 2022, 4:21 PM IST
Highlights

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 2019 கடந்த மே மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக  பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் வார்டுகளை பிரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து பார்த்திபன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதாவது, சென்னை மாநகராட்சி உள்ள வார்டுகளை பிரித்து பெண்களுக்கு 50% என்று இடஒதுக்கீடு வழங்காமல், மண்டல வாரியாக பிரிப்பதால் மகளிருக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்படுவதாகவும், இது அரசு பிறப்பித்துள்ள சட்டத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் சென்னை மத்திய பகுதியில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வார்டுகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டது என்றும், இதில் சட்ட விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அரசியலமைப்பு சட்டத்தில் வார்டுகள் பிரிக்கும் பொழுது வார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரிக்க வேண்டுமே தவிர, மண்டல வாரியாக பிரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மண்டல வாரியாக பிரித்து  கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மனுதாரர் தரப்பில் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காததால், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள வார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 50 சதவீதத்தை பிரித்து  பெண்களுக்கு வழங்கலாம் என்று அறிவுறுத்தி வழக்கு விசாரணையை முடித்து வைத்துள்ளனர்.

click me!