
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். இவர் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தானாகவே நீதிபதி கர்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
அப்போது, மே 5ஆம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி டிஜிபிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பதிலுக்கு உத்தரவிட்டார்.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
வன்கொடுமைச் சட்டத்தின் படி 7 நீதிபதிகளும் குற்றம் செய்துள்ளதாக நீதிபதி கர்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.