
கடப்பா வனப்பகுதியில் உள்ள ஏரியில் மீட்கப்பட்ட 5 பேரின் உடல்கள், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் முடிவுகள் வர 2 மாதங்கள் ஆகும் என்றும் உடற்கூறாய்வு செய்யும் மருத்துவர் அனந்த குமார் கூறியுள்ளார்
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில், திருப்பதி - கடப்பா நெடுஞ்சாலையில் ஒண்டிமிட்டா எனும் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று காலை 7 சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டு, 5 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் சிலரின் சடலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இறந்தவர்களில் சிலரின் உடல்களில் காயங்கள் உள்ளன. சிலர் செருப்பு அணிந்து உள்ளனர். அவர்களது பைகளும் தோளில் உள்ளன. அனைத்துச் சடலங்களும் ஏறக்குறைய ஒரே இடத்தில் கிடந்தன. இந்த ஏரி முழுவதும் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. ஏரி மற்றும் ஏரியைச் சுற்றிலும் சேறும்
சகதியுமாக காட்சியளிக்கின்றன. மேலும், இந்த ஏரியில் அதிகபட்சமாக 6 அடி ஆழம் மட்டுமே தண்ணீர் உள்ளதாக அப்பகுதி கிராமத்தினர் கூறுகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, இது சதி என்றே தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே, திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டனர். இதனால் இரண்டு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை எழுந்தது. இது குறித்து மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆணையமும் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், செம்மரம் கடத்தும் கும்பலை கட்டுப்படுத்த ஆந்திர போலீசார் இம்முறை என்கவுன்டர் செய்யாமல், இவர்களை அடித்துக் கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உயிரழந்தவர்களின் சில அடையாளங்களைக் கொண்டு கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன், முருகேசன் ஆகிய இருவர் என அடையாளம் தெரியவந்துள்ளது.
கடப்பா வனப்பகுதியில் உள்ள ஏரியில் மீட்கப்பட்ட 5 பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகள் வர 2 மாதங்கள் ஆகும் என்று உடற்கூறு ஆய்வு செய்யும் மருத்துவர் அனந்த குமார் கூறியுள்ளார். உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் உள்ளதால், காயங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருததுவர் அனந்த குமார் கூறியுள்ளார்.
கடப்பா அரசு மருத்துவமனையில் நடைபெற்ற 5 தமிழர்களின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றதை அடுத்து செய்தியாளர்களிடம் மருத்துவர் அனந்த குமார் இவ்வாறு கூறினார்.
இந்த நிலையில், ஆந்திர காவல் துறை சிறப்பு அதிகாரி, கூறும் போது அவர்கள் மீது என்கவுன்டர் நடத்தப்படவில்லை என்றும், தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.