
நீலகிரி
நீலகிரியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 44 ஆயிரத்து 700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும் 50 மைக்ரான் அளவு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து சிறு வணிகர்கள், பொதுமக்களுக்கு அதிகளவு விற்பனை செய்வதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் ஆணையாளர் பார்வதி தலைமையில் ஸ்ரீஜித், ரமேஷ், செல்வம் உள்ளிட்ட பணியாளர்கள் கூடலூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது சுமார் 30 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 25 கடைகளில் 50 மைக்ரான் அளவுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது.
ஆனால் மீதமுள்ள 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டி க்பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 44 ஆயிரத்து 700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அப்போது நகராட்சி அலுவலர்களிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட வியாபாரிகள் இனி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யப்பட மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.
ஆனால், நகராட்சி அலுவலர்கள் வியாபாரிகளின் உறுதிமொழியை ஏற்கவில்லை. பலமுறை எச்சரித்தும் அதிகாரிகளின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்தது தவறு என்று கூறி நகராட்சி ஆணையாளர் பார்வதி 5 வியாபாரிகளுக்கும் ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து உடனடியாக வசூலித்தார்.
நகராட்சி வரலாற்றில் இந்த அளவுக்கு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து அபராத தொகையும் வசூலித்தது இதுவே முதன்முறையாகும் என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.