
நாமக்கல்
நாமக்கல்லில் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு விழுந்ததை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி அந்த பசுமாட்டை மீட்டனர். இதனால் பொதுமக்கள் அவர்களை வெகுவாக பாராட்டினர்.
நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (45). விவசாயியான இவர் தனது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்துவிட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது.
பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் அலறினார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள்.
பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர். சுமார் ஒரு மணி நேரம் முயற்சிக்கு பின்னர் பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர்.
கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாட்டை உயிருடன் காப்பாற்றியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை வெகுவாக பாராட்டினர்.