வால்பாறையில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழை….  தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….

First Published Jun 11, 2018, 7:17 AM IST
Highlights
heavy rain in valparai area and today holiday for taluk


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோவை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் நன்றாக பெய்தது. சில மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, நகராட்சி சுற்றுலா மாளிகை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வறட்டுப்பாறை பகுதி கொண்டை ஊசி வளைவு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 



சோலையார் அணைக்கு செல்லும், பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள்,  சிரமத்திற்கு ஆளாகினர். 3 நாட்களாக அப்பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  



மேலும், தொடர்மழை காரணமாக, சோலையார் அணை நீர்மட்டம் 74 அடியாக உயர்ந்துள்ளது. அடுத்த ஒருசில தினங்களில், அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக வால்பாறை வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்று  ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!