மண்ணில் புதைந்த 400 ஆண்டுகள் பழமையான கற்சிற்பம் கண்டுபிடிப்பு; வெளியில் எடுத்தால் தீங்கு வருமோ என்று அச்சம்…

First Published Sep 27, 2017, 9:12 AM IST
Highlights
400 years old rock sculpture discovered in the soil Fear of being afraid of coming out ...


விருதுநகர்

ராஜபாளையத்தில் மண்னில் புதைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான கற்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை வெளியில் எடுத்தால் எதாவது தீங்கு நேருமோ என்று ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி அச்சம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று செய்தியாளர்களிடம், “ராஜபாளையம் பகுதியில் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பழமையான கற்சிற்பம் ஒன்று மண்ணில் பாதிக்கும் மேல் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிற்பத்தில் வீரன் ஒருவனும், அவனது மனைவியும் உள்ளனர். வீரனின் வலது கையில் வாள் ஒன்றை உயரப் பிடித்துள்ளார். அருகில் உள்ள அவனது மனைவி வலது கையில் அல்லி மலர் ஒன்றை ஏந்தியவாறும் அமைக்கப்பட்டு உள்ளது.

வீரன் மற்றும் அவனது மனைவி ஆகிய இருவரின் தலைக் கொண்டை அலங்காரத்துடன், காதணிகள் அணிந்த நிலையில் உள்ளனர். இதில் மேற்பகுதியில் கூரை போன்று சற்று நீட்டியவாறு வெயில் மற்றும் மழையிலிருந்து காப்பதற்கான முறைகளும் இச்சிற்ப வடிவமைப்பில் பின்பற்றப்பட்டு உள்ளன.

இருவரின் உருவங்களும் வயிற்றுப்பகுதி வரை மட்டுமே தெரிகிறது. மீதி பாகங்கள் மண்ணில் புதைந்துள்ளது. மேலும், சிற்பம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
இவற்றின் உருவ அமைப்பைக் கொண்டு 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பழங்காலத்தில் இப்பகுதியில் நடைபெற்ற வீர நிகழ்வு ஒன்றில் வீரன் இறந்துவிடவே அவனது மனைவியும் தன் கணவன் மீதுள்ள அன்பு காரணமாக வீரனை எரித்த தீயில் விழுந்து இறந்ததன் நினைவாக இருவரையும் சேர்த்து, வீரம் மற்றும் கற்புடைமையைப் போற்றும் விதத்தில் அக்கால மக்களால் சிற்பமாக உருவெடுத்து வழிபட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இச்சிற்பம் மண்ணுக்குள் புதைந்து போனது. தற்போது அருகில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் திருவிழாவின் போது இக்கல் சிற்பம் முன்பு வாணவெடிகளை வெடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதால் இச்சிற்பத்தை "வாண வெடிச்சாமி" என்று அழைக்கின்றனர்.

ஒரு காலத்தில் இப்பகுதி வளமான நீரோடைச் செல்லும் பகுதியாக இருந்துள்ளது. தற்போது ஊரின் மையப் பகுதியில் சாலையின் ஓரத்தில் பள்ளத்தில் பொலிவிழந்து காணப்பட்டு வருகிறது.

இச்சிற்பத்தை மேலே எடுத்து வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எடுத்து வைத்தால் ஏதேனும் தீங்கு நேரும் என்று பயப்படுகின்றனர்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இது "நடுகல்" "சதிக்கல்" "நினைவுச் சிற்பம்" போன்ற சிறப்பு பெயர்களை குறிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

click me!