
திருமானூர் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சுள்ளங்குடியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், பரிசுத்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உலகநாதன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
போராட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த 5 மாதமாக தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருக்கும் சம்பளத்தை வழங்கிட வேண்டும்; ஏலாக்குறிச்சி – செங்கராண்டி தெருவில் தார் சாலை அமைக்க வேண்டும்; புள்ளம்பாடி வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 40 பேரை திருமானூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் தலைமையில் காவலாளர்கள் கைது செய்து ஏலாக்குறிச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.