Bribe for visa: சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்... கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு சிபிஐ காவல்!!

By Narendran SFirst Published May 19, 2022, 4:48 PM IST
Highlights

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, சென்னையில் ஆடிட்டராக உள்ள பாஸ்கர் ராமன் மூலம் 263 சீனர்களை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆடிட்டர் பாஸ்கர் ராமன் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டராக இருந்தார். இதனால் 263 சீனர்களுக்கு இந்திய விசா பெற்று தர ஆடிட்டர், கார்த்தி சிதம்பரம் உதவியை நாடினார். கார்த்தி சிதம்பரம் உதவியுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு சீனர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டது. அந்த சலுகையின் படி 263 சீனர்கள் இந்தியாவில் தங்கி வேலை செய்ய தடையில்லா விசா வழங்கப்பட்டது. இதற்காக மான்சாவில் உள்ள தனியார் நிறுவனம் ரூ.50 லட்சம் பணத்தை ஒரே தவணையாக மும்பையில் உள்ள பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பணம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ரூ.305 கோடி பணம் பெற்ற விவகாரத்தில் சிபிஐ முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் நடத்திய சோதனை செய்யப்பட்டது.

அப்போது தான் 263 சீனர்களுக்கு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி பணியாற்ற விசா வழங்க ரூ.50 லட்சம் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிபிஐயிடம் சிக்கியது. அந்த ஆவணங்களின் படி சிபிஐ அதிகாரிகள் முழு விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2010-2014 ஆம் ஆண்டு காலத்தில் இந்திய வெளியுறவுத்துறை சட்ட விதிகளுக்கு முரணாக 263 சீனர்களுக்கு இந்திய விசா வழங்க மத்திய உள்துறை அமைச்சம் அனுமதி வழங்கியது தெரிவந்தது. இதற்கு பின்னணியில் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தலையீடு நேரடியாக இருந்ததும் விசாரணை மூலம் சிபிஐ உறுதி செய்தது. அதைதொடர்ந்து டெல்லி சிபிஐ, சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதாக சென்னையை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான எஸ்.பாஸ்கர்ராமன் முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அனல் மின் நிலையம் அமைத்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி விகாஸ் மகாரியா மற்றும் பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் உள்ள தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பெல் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம், அறியப்படாத அரசு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. பின்னர் சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வசித்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் நடத்தும் அலுவலகம் உட்பட 3 இடங்களில் டெல்லியில் இருந்து வந்த 14 சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதேபோல், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு, மும்பையில் உள்ள நிறுவனங்கள், கர்நாடகா மாநிலம் கொப்பல் பகுதியில் உள்ள நிறுவனம், ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா பகுதியில் உள்ள நிறுவனம், பஞ்சாப் மான்சாவில் உள்ள நிறுவனம் என 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, சீனர்களுக்கு சட்ட விரோதமாக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்று கொண்டு மோசடி செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.50 லட்சம் பணம் அனைத்தும் மும்பையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவு நிறுவனம் மூலம் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் பணம் கைகளுக்கு வந்ததற்கான ஆவணங்களும் சிக்கியது. இந்த சோதனையின் இறுதியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ அதிகாரிகள் நள்ளிரவில் சென்னையில் அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஆஜர் செய்யப்பட்டார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!