ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ்… 31 ஆக குறைந்தது தமிழக பாதிப்பு!!

By Narendran SFirst Published Dec 23, 2021, 6:55 PM IST
Highlights

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில் 31 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில் 31 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து  இந்தியாவில்  டெல்லி, மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக  ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் கடிதமும் எழுதியிருந்தது. அதில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்தலை தீவிரப்படுத்த வேண்டும். தேவையானால் இரவு நேர ஊரடங்கைத் அமல்படுத்தலாம். அதேபோல் அதிகளவு மக்கள் கூடும் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அவசர நிதியைப் பயன்படுத்தி மருத்துவ கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும். தேவையான அளவு படுக்கைகள், ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் உபகரணங்கள் உள்ளனவா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதித்தோர் உள்ள பகுதியில் பரிசோதனை, கண்காணிப்பின் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய அரசு வலியுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகிறோம். தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இதுவரை86 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், அவரது குடும்பத்தினர் இரண்டு பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியானது. தற்போது அவர்கள் குணமடைந்துள்ளனர். மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 31 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று தெரிவித்தார்.

click me!