
ஒமைக்ரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200ஐ கடந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தற்போது 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் கடிதமும் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணித்தலை தீவிரப்படுத்த வேண்டும். தேவையானால் இரவு நேர ஊரடங்கைத் அமல்படுத்தலாம். அதேபோல் அதிகளவு மக்கள் கூடும் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அவசர நிதியைப் பயன்படுத்தி மருத்துவ கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும். தேவையான அளவு படுக்கைகள், ஆம்புலன்ஸ், ஆக்ஸிஜன் உபகரணங்கள் உள்ளனவா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா தொற்றால் பாதித்தோர் உள்ள பகுதியில் பரிசோதனை, கண்காணிப்பின் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதை அடுத்து மத்திய அரசு வலியுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனிடையே இன்று ஒமைக்ரான் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது. இதில், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.