
கோவை (கோயம்புத்தூர்) நகரின் அவினாசி சாலையில் (SH-52) அமைந்துள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலம் (G.D. Naidu Flyover), தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலமாக உருவெடுத்துள்ளது. இது கோவையின் புதிய அடையாளமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாகவும் கருதப்படுகிறது. இந்த மேம்பாலம் கோவையின் தொழில், ஐ.டி. மற்றும் விமான நிலைய போக்குவரத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1791 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட பாலத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வியாழன் கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். மேலும் இந்த பாலத்திற்கு பெயர் வைப்பதிலேயே பூகம்பம் கிளம்பியது. பலதரப்பு எதிர்ப்புகளையும் கடந்து தான் முதல்வர் இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை 10 கிமீ தூரத்தைக் கடக்க சுமார் 45 நிமிடங்கள் ஆகும் என்ற நிலையில், புதிய பாலத்தை பயன்படுத்தி வெறும் 10 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாலம் அண்மையில் தான் திறக்கப்பட்டுள்ளது என்பதால் வாகன ஓட்டிகள் பலரும் இந்த பாலத்தில் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதி நோக்கி ஜிடி நாயுடு பாலத்தில் சென்ற கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில், காரில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாலம் திறக்கப்பட்ட சில தினங்களிலேயே நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.