ரூபாய் நோட்டு பிரச்சனை : 29ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – விக்கிரமராஜா அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
ரூபாய் நோட்டு பிரச்சனை : 29ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – விக்கிரமராஜா அறிவிப்பு

சுருக்கம்

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்க கோரி வரும் 29ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:-

நாடு முழுவதும், 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தங்களுடைய அன்றாட செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, புதிய ரூ.500 நோட்டுகள் அதிகளவில் அச்சிடப்பட்டு வங்கிகளில் எளிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.50, ரூ.100 நோட்டுகளையும் அதிகப்படுத்த வேண்டும்.

வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு நடப்பு கணக்கில் வாரம் ஒருமுறை ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பை உயர்த்தி குறைந்தப்பட்சம் ரூ.2 லட்சம் வரையிலும், கடந்த மாதங்களில் நடைபெற்ற பரிவர்த்தனை அடிப்படையில் அதிக தொகை எடுக்க அனுமதிக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சிறிய, நடுத்தர வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் இருப்பில் இருந்து எடுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும். மின்னணு வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பதிவு பெற்ற வணிக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ஸ்வைப் கார்டு இயந்திரத்தை வங்கிகள் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த 22ம் தேதி நடந்தது. அக்கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டம், வணிகர்களை பாதிக்கும் தொழிலாளர் நலச்சட்ட அறிவிப்புகள், உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள வணிக முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து முதற்கட்டமாக வரும் 29ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிறகும் மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக முழுவதும் தொடர் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?