மெடிக்கல் சீட்டுக்கு மாணவர்களிடம் ரூ.84 கோடி மோசடி - மதனின் சொத்துக்களை முடக்க போலீசார் தீவிரம்

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
மெடிக்கல் சீட்டுக்கு மாணவர்களிடம் ரூ.84 கோடி மோசடி - மதனின் சொத்துக்களை முடக்க போலீசார் தீவிரம்

சுருக்கம்

எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி 84 கோடிக்கு மேல் மாணவர்களிடம் மோசடி செய்த புகாரில், கைது செய்யப்பட்ட மதனின் சொத்துக்களை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக மதனின் மனைவிகள், அவருக்கு உதவி செய்த கள்ளக்காதலிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.84.24 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கைதுக்கு பயந்து தலைமறைவான மதனை திருப்பூரில் அவரது 3வது மனைவி என்று கூறப்படும் வர்ஷா என்பவர் வீட்டில், போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இதைதொடர்ந்து, அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் தலைமறைவானது பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், மதன் அளித்த வாக்குமூலத்தை போலீசார் செய்தியாளர்களிடம் கூறினர். அதன் விவரம் வருமாறு.

மதனுக்கு ஆரம்ப காலத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் சீட் வாங்கி கொடுப்பது முதல் நடிகைகள் வரை இருந்த தொடர்புகள் அனைத்தையும் கூறினார்.

வேந்தர் மூவிஸ் உரிமையாளராக இருக்கும் மதன், ஆரம்ப காலத்தில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை சேர்க்கும் புரோக்கராக பச்சமுத்துவிடம் அறிமுகம் ஆனார். அதிகளவில் மாணவர்களை எஸ்ஆர்எம் கல்லூரியில் சேர்த்துவிடுவதாக கூறினார். பச்சமுத்துவும் அதற்கு சம்மதித்தார்.

இதனால் மாணவர்களிடம் ஆரம்பத்திலே ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணத்தை பெற்றுக் கொள்ளும் மதன், கடைசி வரை கல்லூரியில் மாணவர்களை சேர்க்க மாட்டார். இது குறித்து பச்சமுத்து கேட்டால், பணம் அதிகமாக உள்ளது என்பதால் மாணவர்கள் யாரும் சேர மாட்டோம் என கூறுவதாக பச்சமுத்துவை நம்ப வைத்துள்ளார்.

 

பின்னர், மாணவர் சேர்க்கை முடியும் நேரத்தில் அவசரத்தில் இவ்வளவு தான் மாணவர்கள் பணம் கொடுத்துள்ளனர். அவர்களை உடனடியாக கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பார். இதன் மூலம் மாணவர்களிடம் ரூ.1 கோடி வரை பெற்றுக் கொண்டு, அதில் பாதியை மட்டும் கல்லூரி நிர்வாகத்துக்கு கொடுப்பார்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் 225 மருத்துவ சீட்டில் மதனுக்கு மட்டும் ஆண்டுதோறும் 50 சீட் வழங்கப்படும். மதனின் இந்த மோசடி மூலம் ரூ.25 கோடி வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதவிர இவர் வாங்கி கொடுக்கும் 50 சீட்டுகளுக்கான கமிஷன் தொகையும் மதனுக்கு கிடைக்கும்.

மருத்துவ சீட் மோசடி மூலம் கோடிக்கணக்கில் மதன் கையில் பணம் புரண்டுள்ளது. இந்நிலையில் ரவி பச்சமுத்து கைக்கு எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகம் சென்றது. இதையடுத்து மதனுக்கு கிடுக்கிப்பிடிகள் போடப்பட்டது. இதற்கு பச்சமுத்துவின் தம்பி சீனிவாசன் தான் காரணம் என்று மதன் நினைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மதன், கூலிப்படையை வைத்து சீனிவாசனை தீர்த்துக்கட்ட முயன்றார். இதில் சீனிவாசன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் பச்சமுத்து குடும்பத்தினர் இந்த விஷயம் வெளியில் தெரிய வேண்டாம் என்பதற்காக இது பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட்டுக்காக மதன் பணம் வாங்கினார். அதில் பாதி பணத்தை கல்லூரி நிர்வாகத்தில் உள்ள ஒருவரிடம், தனது கூட்டாளியான சுதீர் மூலம் கொடுத்து அனுப்பினார். அந்த பணத்தை சுதீர் கொடுக்கும்போது அதை வீடியோ எடுத்துக் கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கும் ரவி பச்சமுத்து, திடீரென இந்த ஆண்டு சீட் வழங்க தடை விதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மதன் இந்த விவகாரத்தில் பச்சமுத்து மாட்டினால் தான், தாம் தப்பிக்க முடியும் என திட்டமிட்டார். இதை தொடர்ந்து கடிதம் எழுதி வைத்து மதன் தலைமறைவாகி விட்டார்.

மருத்துவ சீட்டுக்காக பணம் கொடுத்த மாணவர்களின் பெற்றோர், எஸ்ஆர்எம் நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து, மதனிடம் இருந்து பணத்தை பெற்ற எஸ்ஆர்எம் நிர்வாகியை உடனடியாக வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார். மேலும் தலைமறைவான மதனை போலீசார் நாடு முழுவதும் தேடியும் சிக்கவில்லை.

மதன் தலைமறைவு வாழ்க்கை நடத்திய 179 நாட்களும், ஒரு உல்லாச வாழ்க்கையே வாழ்ந்துள்ளார். மதன் சினிமா துறையில் பழக்கமான கீதாஞ்சலியுடன் நெருங்கி பழகியுள்ளார். அவர் மூலமே நடிகைககள் முதல் துணை நடிகைகள் வரை தினமும் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

பணத்தை வாரி இறைத்ததால் கீதாஞ்சலி, மதனுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். மதன் சொல்வதை எல்லாம் கீதாஞ்சலி நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். அந்த வகையில் தான் ஹரித்துவார், இம்பால், கோவா உள்ளிட்ட இடங்களில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

மதனின் 2வது மனைவி சுமலதாவின் மகன் பிறந்த நாள் விழாவுக்கு, உறவினர் என்ற முறையில் வர்ஷா என்பவர் வந்தார். அவரை மனைவி சுமலதாதான் மதனுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது கணவர் இல்லாமல் தனியாக வர்ஷா வாழ்ந்து வருவது மதனுக்கு தெரியவந்தது.

இதைபயன்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வர்ஷாவை தன் வலைக்குள் விழவைத்தார் மதன். அதன் பின்னர், தன் மனைவிக்கு தெரியாமல் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். தலைமறைவான மதன், போலீசில் பிடிபடுவதற்கு முன்பாக திருப்பூரில் உள்ள வர்ஷா வீட்டில் தங்கினார். அந்த நேரத்தில் அவரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார். பின்னர், அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!
சின்னம்மா தலைமையில் ‘புதிய அதிமுக’? டெல்டா சொந்தங்களை கொத்தாக வளைக்கும் சசிகலா - எடப்பாடிக்கு புதிய செக்!