
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் உங்க விஜய் நான் வரேன்' என்ற பெயரில் நடத்தும் சுற்றுப்பயண பரப்புரையின் ஒரு பகுதியாக காலை நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு, மாலை கரூர் மாவட்டத்தின் வேலுச்சாமிபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் மூச்சுத்திணறல் மற்றும் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர். விஜய் பேசி முடித்து அங்கிருந்து விலகிய சில நேரத்திற்குப் பிறகு, கூட்டம் கலைவதற்கிடையே இந்த சம்பவங்கள் தெரியவந்தன.
ஆரம்பத்தில் 2 பேர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளனர். 20-30 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். பலர் மூச்சுத்திணறல் மற்றும் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து கூடுதல் மருத்துவக் குழுக்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளன.
சம்பவம் தெரிந்ததும், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்வரன் ஆகியோரை கரூருக்கு அனுப்பி, போர்க்கால அடிப்படையில் சிகிச்சை மற்றும் உதவிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். ஏ.டி.ஜி.பி.யிடம் பேசி, சூழ்நிலையை கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.