2 கோடி கேட்டமைன் போதை பொருளுடன் 6 பேர் கைது – கார், பைக் பறிமுதல்

First Published Nov 12, 2016, 4:13 AM IST
Highlights


தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்பிலான கேட்டமைன் போதை பொருளை கடத்தி விற்க முயன்ற 6 பேரை போதை பொருள் தடுப்பு நுன்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கேட்டமைன், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு பெரிய அளவில் போதை பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள ஹோட்டல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார் நின்றது. அதனருகே பைக்கில் 2 பேர் வந்து நின்றனர். உடனடியாக போலீசார் பைக்கில் வந்த 2 பேர் மற்றும் காரில் இருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர். பின்னர் காரில் சோதனை செய்தபோது, தலா அரை கிலோ எடை கொண்ட 4 பார்சல்கள் இருந்தன.

அவற்றை பிரித்து பார்த்தபோது கேட்டமைன் எனப்படும் போதை பொருள் என தெரிய வந்தது. இதையடுத்து போதை பொருள், கார், பைக் ஆகியற்றை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட 6 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில்ர, தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (28), புஷ்பா நகரை சேர்ந்த கிங்ஸ்டன் (46), ஏரல் ஸ்டீபன்ராஜ் (39), புதியம்புத்தூர் ராமகிருஷ்ணன் (42), சுந்தர்நகர் இசக்கிராஜா (31) மற்றும் கார் உரிமையாளர் மில்லர்புரம் சாம் அருள்ராஜ் (30) என தெரிந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான மணிகண்டன் கிரேன் ஆபரேட்டர். அமுதா நகரைச் சேர்ந்த ரவி என்பவரும் இவருடன் வேலை பார்க்கிறார். குறுக்குவழியில் இருவரும் பணக்காரனாக திட்டமிட்டனர்.

அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷிடம் நேற்று முன்தினம் 2 கிலோ கேட்டமைனை வாங்கி தங்களுக்கு அறிமுகமான கிங்ஸ்டன், ஸ்டீபன்ராஜ், ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, சாம்அருள்ராஜ் ஆகியோருக்கு விநியோகம் செய்துள்ளனர். 2 கிலோ பார்சலை காருக்குள் வைத்து பங்கு போடும்போது போலீடம் சிக்கி கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேட்டமைனின் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடியாகும். பின்னர் 6 பேரையும் போலீசார் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான சுரேஷ், ரவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

click me!