
வழிப்பறியில் ஈடுபட மறுத்ததால், பிரபல ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய நண்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர், கார்கில் நகர், கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் டேவிட் (26), பிரபல ரவுடி. இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற டேவிட், பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் திருவொற்றியூர் கரிமேடு அருகே இந்திரா நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகில் நேற்று மதியம் உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தது டேவிட் என தெரிந்தது. மேலும், சடலத்தின் அருகில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பொருட்கள் கிடந்தன. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில் டேவிட்டின் நண்பர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் (எ) திருட்டு சரவணன். நேற்று காலை டேவிட் வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்து மேற்கண்ட பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது, மேலும் மது வாங்க வேண்டும்.
கையில் பணம் இல்லை. இதனால், வழிப்பறியில் ஈடுபடலாம் என சரவணன் கூறியுள்ளார். அதற்கு டேவிட், இப்போதுதான் ஜாமீனில் கஷ்டப்பட்டு வெளியே வந்தேன். உடனே மீண்டும் சிறைக்கு போக முடியாது என கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த சரவணன், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பினார் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.