புதைவட மின்கம்பி திட்டத்திற்கு 17 ஆயிரம் கோடி – மத்திய அரசை வலியுறுத்திய அமைச்சர் தங்கமணி

First Published May 3, 2017, 6:09 PM IST
Highlights
17000 crore for the IMG project Minister thangamani who emphasized the central government


சென்னையில் புதைவட மின் கம்பி திட்டத்தை செயல்படுத்த 17 ஆயிரம் கோடி தரவேண்டும் மத்திய மின்துறை அமைச்சரிடம் அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாடு இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமை தாங்கினார்.

இதில் தமிழகம் சார்பில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :

மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது மின் உற்பத்தியில் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

2013-14 ஆம் ஆண்டில் ரூ.13,985 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு 2016-17-ஆம் ஆண்டில் ரூ.3,675 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த சில வருடங்களில், மாநிலத்தின் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க கூடுதல் மின்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கின்றது. மேலும் இந்த இடத்தை தக்கவைப்பதற்கான அனைத்து முனைப்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(1) மேலே செல்லும் 230 கிலோ வோல்ட் மின்கம்பிகளை 230 கிலோ வோல்ட் திறனுடைய புதைவடங்களாக மாற்றுதல்.

(2) தற்போதுள்ள மின்மாற்றி கட்டமைப்புகளை வளைய சுற்றுதர அமைப்புகளாக மாற்றுதல்.

(3) தற்போதுள்ள சாதாரண மின்சார பெட்டிகளை அதிக திறன் கொண்ட 6 வழி மின்சார பெட்டிகளாக மாற்றுதல்.

(4) சென்னை பெருநகரின் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை மின் பாதைகளை பூமிக்கடியில் புதைவடங்களாக மாற்றுதல்.

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.17,000 கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தேவையான ரூபாய் 17,000 கோடி தொகையை மானியமாகவோ அல்லது கிராமப்புற மின் மயமாக்கல் நிறுவனம் மற்றும் மின்விசை நிதி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மென்கடனாகவோ அளிக்கும்படி மத்திய மின்சாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள் 1 மற்றும் 2-ன் மொத்த மின் நிறுவுதிறனான 2000 மெகாவாட்டில் 1125 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அலகுகள் 3 மற்றும் 4-ன் மொத்த மின் உற்பத்தியான 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

செய்யூர் மிக உய்ய அனல் மின் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!