
மது குடிப்பதற்காக புதிய, புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் தமிழகத்தின் “குடிமகன்களை” கிட்டே யாரும் வரமுடியாது. மது குடித்துவிட்டு வரும் போது போலீஸ் தொந்தரவில் இருந்து தப்பிக்க ஆற்றில் புதிதாக பாலமே கட்டி இருக்கிறார்கள் திருச்சி இ புதூர் குடிமகன்கள்.
இந்த அளவுக்கு பாலம் கட்டத் தூண்டிய மது மீதான பிரியமா… அல்லது ெவறியா என்பது தெரியவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக திருச்சி அருகே இருக்கும் கீரைப்பட்டி, இ புதூர் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கொரையாற்றுக்கு கரைக்கு மேல்பகுதியில் இ-புதூரில் டாஸ்மாக் கடை புதிதாக தொடங்கப்பட்டது.
ஆனால், இந்த கடைக்குச் செல்ல வேண்டும் என்றால், சுற்றுப்பகுதியில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த குடிமகன்கள் 14 கி.லோமீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதுமட்டுமல்லாமல் செல்லும் பாதையில் இரு இடங்களில் போலீசாரின் சோதனைச் சாவடி இருப்பதால், இரவு நேரங்களில் மதுபோதையில் வரும் குடிமகன்களுக்கு வலைவிரிக்கிறார்கள். அப்போது ஏராளமான குடிமகன்கள் மது குடித்த போதையில் போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் அபராதம், லைசன்ஸ், வாகனம் பறிமுதலுக்கும் ஆளாகிறார்கள்.
இதனால், சரக்கு அடிக்க குடிமகன்கள் பெரிதும் சிரமப்பட்டனர். கொரையாற்றுக்குள் இறங்கி ஆற்றைக் கடந்து செல்வது என்பது கொளுத்தும் வெயிலில் இயலாத காரியமாக இருந்தது. இதனால், குடிமகன்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்கள். ஆற்றில் பாலம் கட்டித்தரக்கோரி டாஸ்மாக் சார்பில் பொதுப்பணித்துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அது இப்போது சாத்தியமில்லை என அவர்களும் கைவிரித்துவிட்டனர்.
இதையடுத்து குடிமகன்கள் செயலில் இறங்கினர், இ-புதூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் தற்காலிகமாக மூங்கில்கள், மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி மரப் பாலத்தை அமைத்துவிட்டனர். இதனால், கரையின் ஒருபுறத்தில் தங்களது இருசக்கரவாகனங்களை நிறுத்திவிட்டு, வரும் குடிமகன்கள், டாஸ்மாக்கில் மது அருந்துவிட்டு, மிகவும் ரிலாக்சாக இப்போது பாலத்தில் நடந்து வருகிறார்கள். 14 கி.மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியதும் இல்லை, போலீசின் கெடுபிடியிலிருந்தும் சிக்க வேண்டியது இல்லை. எப்படி குடிமகன்கள் ஐடியா….
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்டபோது, “ கொரையாற்றின் குறுக்கே எங்கள் அனுமதியில்லாமல் யாரும் பாலம் கட்டக்கூடாது. அவ்வாறு கட்டி இருந்தால், அது அகற்றப்படும்” எனத் தெரிவித்தனர்.