அரசு பொது இ-சேவை மையங்களில் மேலும் 15 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படும் - ஆட்சியர் அறிவிப்பு...

First Published Mar 16, 2018, 9:13 AM IST
Highlights
15 more certificates will be issued to the Government e-Service Centers - collector announced...


தேனி

அரசு பொது இ-சேவை மையங்களில் மேலும் கூடுதலாக 15 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.  

அதில், "தேனி மாவட்டத்தில் 72 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், 81 கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள், 8 அரசு கேபிள் டிவி மையங்கள் மற்றும் 45 கிராமப்புற தொழில் முனைவோர் மையங்கள் என மொத்தம் 206 இடங்களில் அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் போன்ற ஐந்து வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் உத்தரவின்படி, தற்போது மின் ஆளுமை திட்டத்தின் கீழ் விவசாய வருமானச் சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், 

ஆண் குழந்தையின்மை சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வநிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் என மொத்தம் 15 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொதுசேவை மையங்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் போது, விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விவரம் தங்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 

விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும், விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக் குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருகாமையிலுள்ள அரசு பொது சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
 

click me!