
தஞ்சாவூர்
குடும்ப தகராறை தீர்த்து வைக்க ரூ.3000 இலஞ்சம் வாங்கிய காவல்துறை ஏட்டுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கு 15 வருடங்களாக நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம், ஐயம்பேட்டை அக்ரஹாரம் நெடுந்தெருவைச் சேர்ந்தவர் மும்மூர்த்தி. இவர் தனது குடும்பத் தகராறு தொடர்பாக ஐயம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2003–ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24–ஆம் தேதி புகார் அளிக்க சென்றார்.
அப்போது, அங்கு இருந்த காவலர் குடும்ப தகராறை தீர்த்து வைக்க ரூ.3000 இலஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இலஞ்சம் கொடுக்க விரும்பாத மும்மூர்த்தி இதுபற்றி தஞ்சையில் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள், இலஞ்சம் கேட்ட ஐயம்பேட்டை காவலரை கையும், களவுமாக பிடிக்க முடிவெடுத்தனர்.
அதன்படி மும்மூர்த்தி, ஐயம்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த ஆய்வாளர் ஜோதிராம், உதவி ஆய்வாளர் கதிர்வேல், ஏட்டு செல்வராஜ் ஆகிய மூவரிடமும் ரூ.3000-தை இலஞ்சமாக கொடுத்தார்.
இதனை காவலாளர்கள் மூவரும் பெற்றுக்கொண்டபோது இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் திடீரென காவல் நிலையத்திற்குள் நுழைந்து ஆய்வாளர் உள்பட மூவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடையும் முன்பாகவே இலஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆய்வாளர் ஜோதிராம், உதவி ஆய்வாளர் கதிர்வேல் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கும்பகோணம் நீதிமன்றம் நீதிபதி தேன்மொழி தீர்ப்பு அளித்தார். அதில் காவல் ஏட்டு செல்வராஜுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.