நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வாகன சோதனை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து நேற்று இரவு ஶ்ரீபெரும்புத்துர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் 1425 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகன சோதனை தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் சார்பாக சோதனை தீவிரம் அடைந்துள்ளது. வாகனங்களை நிறுத்தி வாகனத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள பணம் கைப்பற்றப்படுகிறது. அந்த வகையில் 155 கோடி ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசு பொருட்கள், மதுபான பொருட்கள் என ஒட்டுமொத்தமாக 324 கோடி மதிப்பிலான பொருட்கள் தேர்தல் ஆணையம் சார்பாக பறிமுதல் செய்யப்பட்டது.
1425 கிலோ தங்கம் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் அருகே சென்னை விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று சென்றது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 1425 கிலோ தங்கம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 400 கிலோ தங்கத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருப்பதால் 1425 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் சரிபார்த்த பிறகே உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்