
விளாத்திகுளம்
மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, பரோலில் வெளியே சென்றுவிட்டு சிறைக்கு திரும்பாமல் போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவானார். அவரை 14 வருடங்களுக்குப் பிறகு காவலாளர்கள் மீண்டும் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தின் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆண்டிவேல் (53). இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு முனியசாமி என்ற மகள் உள்ளார். இவர்கள் அனைவரும் மதுரையில் வசித்துனர்.
கடந்த 1997–ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறால் ஆண்டிவேல் தன்னுடைய மனைவி மாரியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் ஆண்டிவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், ஆண்டிவேல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2003–ஆம் ஆண்டு சிறையில் இருந்து பரோலில் வெளியே சென்றார் ஆண்டிவேல். ஆனால், பரோல் முடிந்த ஆண்டிவேல் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவாகி விட்டார். அவரை காவலாளர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. ஆண்டிவேல் தலைமறைவாகி 14 ஆண்டுகளாக ஆகின.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று ஆண்டிவேல் தனது சொந்த ஊரான வேடநத்தத்துக்கு வந்திருந்தார். அங்கு தன்னுடைய தந்தையைப் பார்க்கச் சென்றதை அறிந்த குற்ற நுண்ணறிவு பிரிவு காவலாளர்கள் பதுங்கி இருந்து ஆண்டிவேலை கைது செய்தனர். பின்னர், அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகளாக காவலாளர்களுக்கு டிமிக்கி கொடுத்தாலும், நிதானமே பிரதானம் என்ற பழமொழியை பின்பற்றி காவலாளர்கள், சிறைக் கைதியை மீண்டும் கைது செய்து திறமையை நிரூபித்துள்ளனர்.