12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்

By Raghupati RFirst Published Apr 22, 2023, 12:11 PM IST
Highlights

தினசரி 12 மணி நேர வேலையை வலியுறுத்தும் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. மத்திய அரசு கொண்டுவந்த தொழிலாளர்களுக்கு எதிரான மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக் கூடாது என சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த மசோதாவை ஆய்வு குழுவிற்கு அனுப்பி முறைப்படுத்தி சரி செய்ய வேண்டும் என விசிக சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த மசோதா தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது என சட்டமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு தலைவர் நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர் அமைச்சர்கள் சி.வி. கணேசன், தங்கம் தென்னரசு.

இதுபற்றி பேசிய போது, “தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு தொழிலாளிகளுக்கும் எதிரானது அல்ல. எந்த ஓரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே 12 மணி நேர வேலை என்பதை நடைமுறைப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு விருப்பமில்லை என்றால் இது நடைமுறைப்படுத்தப்படாது.

இதையும் படிங்க..எடப்பாடி அணிக்கு தாவிய முக்கிய புள்ளி..காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.!

வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத் திருத்தம் பொருந்தாது. விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தொழிலாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அதையும் மீறி 48 மணி நேரத்தையும் கடந்து தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று நிறுவனங்கள் வற்புறுத்தினால் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

மின்னணுவியல் தொழில் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் தயாரிக்கக் கூடிய தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என சில குறிப்பிட்ட நிறுவனங்களில் இந்த சட்டத்திருத்தம் பொருந்தும். வாரத்தில் நான்கு நாட்கள் 12 மணி நேரம் பணியாற்றியவர்கள் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.தொழிலாளர்களுக்கு எதிரான எந்த செயலுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” என்று விளக்கமளித்துள்ளனர்.

இதையும் படிங்க..கருணாநிதி வழி நடக்கும் ஆட்சியில் இப்படியா.? பாஜகவின் நீட்சி.. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணிக்கட்சி

click me!