
தருமபுரி
தருமபுரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற 11 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்து ரூ.1 இலட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தருமபுரி நகரக் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் சுந்தரம், கிருஷ்ணவேணி உள்ளிட்டோர், ஆறுமுக ஆசாரி தெரு, கடைவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, புகையிலை பொருள்கள் விற்பனை செய்த குமார் (34), மணிவண்ணன், ராஜேந்திரன் (58), சண்முகம் (40), ராமமூர்த்தி, ராஜேஸ்வரி (44) உள்பட 11 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.1 இலட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புடைய நரேஷ்குமார் (24) மற்றும் லால்ராம் செளத்ரி ஆகிய இருவரையும் காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.