
கோவை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை என மொத்தம் ரூ. 10.59 கோடி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வசூலிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8-ஆம் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து மாநகராட்சி வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 11-ஆம் தேதி மட்டும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொண்டு வரி செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் மருத்துவர் விஜயகார்த்திகேயன் அறிவித்தார்.
இதையடுத்து அனைத்து மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்களில் வழக்கத்துக்கு மாறாக வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், சேவை வரி, நிலுவைத் தொகை, இதர கட்டணங்களை பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு செலுத்தினர்.
இதில் கிழக்கு மண்டலத்தில் ரூ. 1.79 கோடியும், மேற்கு மண்டலத்தில் ரூ.1.83 கோடியும், தெற்கு மண்டலத்தில் ரூ.1.56 கோடியும், வடக்கு மண்டலத்தில் ரூ.2.04 கோடியும், மத்திய மண்டலத்தில் ரூ.3.35 கோடியும் என மொத்தம் 10.59 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொண்டு குடிநீர் கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்த நவம்பர் 14-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.