15 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டும்…

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 01:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
15 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டும்…

சுருக்கம்

விவசாயிகளுக்குத் துல்லியமான வானிலை அறிக்கையை வழங்குவதற்காக 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்று புதுவை வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சுமார் 100 வேளாண், வேளாண் சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் 8 மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு, புதுவை, கேரளம், கர்நாடகம், இலட்சத் தீவுகள் அடங்கிய 8-ஆவது மண்டலத்தின் 25-ஆவது கூட்டம் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. புதுவை வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் திரிலோசன் மொகபத்ரா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் கமலக்கண்ணன், “தமிழக, புதுவை விவசாயிகள் தற்போது பருவமழை, நதிநீர் பங்கீடு, போதிய விலை இல்லாதது போன்றவற்றால் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் நீண்டநாள் பயிர்களைக் கைவிட்டு குறுகியகாலப் பயிர்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

வறட்சியைத் தாங்கி வளரும் நெல் வகைகளைக் கண்டறிந்ததைப் போலவே எல்லாப் பயிர்களிலும் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய இரகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். தற்போது உள்ள பயிர் காப்பீடுத் திட்டங்கள் விவசாயிகளுக்கு 10 சதவீத அளவிலான இழப்பீடையே பெற்றுக் கொடுக்கின்றன. ஆனால், எல்லாப் பயிர்களையும் உள்ளடக்கிய காப்பீடுத் திட்டத்தை கொண்டு வர ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிய வேண்டும்.

அதேபோல், விவசாயிகள் வானிலை விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள வசதியாக, ஊராட்சிகள்தோறும் அல்லது 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டும்” என்றார்.

விழாவில், பல்வேறு ஆராய்ச்சி மையங்களின் இயக்குநர்கள், பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது.! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamil News Live today 30 December 2025: ரூ.1,950-க்கு விமான டிக்கெட்.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சலுகை