
நீலகிரி
நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் ஒரே நாளில் 1000 மிமீ மழை பதிவானது. எங்கு பார்த்தாலும் மண் சரிவும், வெள்ளப் பெருக்கும், மர முறிவுமாய் காட்சியளிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
ஊட்டியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், ஆங்காங்கே சாலையோரங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மின்கம்பங்கள் சேதமடைகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர்.
காத்தாடிமட்டம் – எடக்காடு சாலை மற்றும் தொட்டபெட்டா – இடுஹட்டி சாலையோரத்தில் இருந்த மரங்கள் திடீரென வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்மழை காரணமாக ஊட்டி–அவலாஞ்சி சாலையில் எடக்காடு, இத்தலார், எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட 15 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அந்த வழியாக அரசு பேருந்துகள் மற்றும் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அகற்றினர்.
ஊட்டி படகு இல்லத்தில் நேற்றும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. பலத்த காற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிதி படகுகள் இயக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை தீவிரமாக பெய்து வருவதால் கூடலூர் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு:
குன்னூர் – 7 மில்லி மீட்டர், கூடலூர் – 64 மில்லி மீட்டர், குந்தா – 60 மில்லி மீட்டர், கேத்தி – 12 மில்லி மீட்டர், கோத்தகிரி – 4 மில்லி மீட்டர், நடுவட்டம் – 42.2 மில்லி மீட்டர், ஊட்டி – 47.2 மில்லி மீட்டர், கல்லட்டி – 20 மில்லி மீட்டர், கிளன்மார்கன் – 70 மில்லி மீட்டர், அப்பர்பவானி – 206 மில்லி மீட்டர்,
எமரால்டு – 94 மில்லி மீட்டர், அவலாஞ்சி – 285 மில்லி மீட்டர், கெத்தை – 7 மில்லி மீட்டர், கிண்ணக்கொரை – 3 மில்லி மீட்டர், கோடநாடு – 12 மில்லி மீட்டர், தேவாலா – 67 மில்லி மீட்டர் என மொத்தம் 1000.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் இந்த மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகம்.