
கரூர்
கரூரில் மூதாட்டியின் காதை அரிவாள்மனையால் அறுத்து நகைகளை கொள்ளையடித்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை வெள்ளாளப் பட்டியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (64).
இவர் கடந்த ஆகஸ்டு 20-ஆம் தேதி தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் அரிவாள்மனையால் செல்லம்மாள் காதை அறுத்து அரை சவரன் தோடு, மூக்குத்தி மற்றும் இரண்டு சவரன் தங்கச் சங்கிலி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த செல்லம்மாள் மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
பின்னர் அவர் இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவலாளர்கள் குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த காமராஜை காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர், கரூர் விரைவு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி காயத்திரி, காமராஜுக்கு ஆயுதம் கொண்டு தாக்கி காயத்தை விளைவித்த குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 397-வது பிரிவின் கீழ் கொள்ளை குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.